மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள காட்கி கிராமத்தில் சாலை சீரமைப்பு பணியின் போது லாரி ஒன்று தோண்டப்பட்ட குழியில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வத்வானி தாலுகா பகுதியில் உள்ள காட்கி என்ற கிராமத்தில் சாலை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சாலை பாதையின் மோசமான நிலைமையை பற்றி மாணவர்கள் அரசு அதிகாரிகளிடம் புகார் அளித்திருந்தனர்.

அந்தப் புகாரின் அடிப்படையில் பொறியாளர் சம்பவ இடத்திற்கு ஆய்வு செய்வதற்காக வந்திருந்தார். அப்போது பொறியாளர் தனது குழுவுடன் ஆய்வு செய்து கொண்டிருந்த நேரத்தில் பெரிய லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அது திடீரென தோண்டப்பட்ட குழியில் கவிழ்ந்ததால் அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக பாதுகாப்பான பகுதியை நோக்கி ஓடினர். சிலர் லாரியின் அடியில் சிக்காமல் இருக்க தோண்டப்பட்ட குழிக்குள் குதித்தனர்.

இந்த காட்சிகள் அனைத்தும் வீடியோவாக பதிவான நிலையில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த விபத்தின் போது பொதுமக்கள் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.