சீனாவின் முதல் பேரரசரான கின் ஷி ஹுவாங் காலத்தில் கட்டப்பட்ட 2,200 ஆண்டுகள் பழமையான பிரம்மாண்டமான நெடுஞ்சாலையின் புதிய பகுதியை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ‘கின் ஸ்ட்ரெய்ட் ரோடு’ என்று அழைக்கப்படும் இந்த சாலை, சுமார் 900 கிலோமீட்டர் நீளம் கொண்டதாகும்.

சமீபத்தில் ஷான்சி மாகாணத்தின் யூலின் நகரில் சுமார் 13 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த சாலையின் பகுதி கண்டறியப்பட்டது. நவீன காலத்தின் நான்கு வழிச் சாலைகளுக்கு இணையாக, சராசரியாக 40 மீட்டர் முதல் 60 மீட்டர் வரை அகலம் கொண்ட இந்த சாலை, அன்றைய காலத்திலேயே மலைகளைக் குடைந்து, பள்ளத்தாக்குகளை நிரப்பி மிகவும் நேர்த்தியாகவும் நேராகவும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சாலை வெறும் போக்குவரத்திற்காக மட்டுமன்றி, எல்லைப் பகுதிகளில் ஊடுருவும் எதிரிகளைத் தடுக்க வீரர்களையும் தளவாடங்களையும் விரைவாகக் கொண்டு செல்லும் ஒரு ராணுவ வியூகச் சாலையாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

நவீன இயந்திரங்கள் இல்லாத அந்தக் காலத்திலேயே, வெறும் ஐந்தே ஆண்டுகளில் இவ்வளவு பெரிய கட்டுமானத்தை முடித்தது இன்றைய பொறியாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சீனப் பெருஞ்சுவருக்கு அடுத்தபடியாகப் போற்றப்படும் இந்தப் பழங்கால நெடுஞ்சாலை, உலகின் நவீன சாலை அமைப்புகளுக்கு ஒரு முன்னோடியாகக் கருதப்படுகிறது.

தற்கால செயற்கைக்கோள் புகைப்படங்கள் மற்றும் நிலத்தடி அகழ்வாராய்ச்சியின் உதவியுடன் கண்டறியப்பட்ட இந்தச் சாலை, பண்டைய மனித நாகரிகத்தின் தொலைநோக்குப் பார்வையை உலகிற்குப் பறைசாற்றுகிறது.