“தோத்துட்டோம்ன்ற ஏமாற்றத்துல நாங்க போய்க்கிட்டு இருக்கப்போ, அவன் வந்து வம்பு இழுத்தா நாங்க சும்மா வேடிக்கையா சார் பார்ப்போம்!” என்று சொல்லும் அளவுக்கு, இலங்கை அணிக்கு எதிரான கிரிக்கெட் போட்டியின் போது இந்திய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, இலங்கை வீரரை மைதானத்திலேயே ஆக்ரோஷமாகத் தள்ளிய விசித்திரச் சம்பவம் சர்வதேச கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2026-ஆம் ஆண்டுக்கான இத்தொடரில், முதலில் பேட்டிங் செய்த இந்திய ஏ அணி 49.2 ஓவர்களில் 265 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தொடர்ந்து ஆடிய இலங்கை ஏ அணியும் 50 ஓவர்கள் முடிவில் சரியாக 265 ரன்கள் மட்டுமே எடுத்ததால் ஆட்டம் சமனில் (Tie) முடிந்தது.

இதனையடுத்து, இந்தியக் கேப்டன் திலக் வர்மாவின் வலியுறுத்தலின் பேரில் நடத்தப்பட்ட பரபரப்பான ‘சூப்பர் ஓவரில்’, முதலில் ஆடிய இலங்கை அணி 16 ரன்கள் குவித்தது. ஆனால், 17 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணியின் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் சூர்யான்ஷ் ஷெட்ஜ் ஆகியோரால் 9 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இதனால் இலங்கை அணி சூப்பர் ஓவரில் அதிரடி வெற்றி பெற்று தங்களது கொண்டாட்டத்தைத் தொடங்கியது.

அப்போது, ஆட்டத்தில் சொதப்பிய ஏமாற்றத்துடன் மைதானத்தை விட்டு வெளியேறிச் சென்று கொண்டிருந்த இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷியை நோக்கி, இலங்கையின் விஷன் ஹாலம்பெக் ஏளனமாக ஏதோ கூறி வம்பு இழுத்துள்ளார்.

இதனால் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற வைபவ், சற்றும் யோசிக்காமல் அந்த இலங்கை வீரரை நெஞ்சோடு சேர்த்துப் பலமாகத் தள்ளித் தனது கோபத்தை வெளிப்படுத்தினார். இருவருக்குள்ளும் மோதல் தீவிரமடைவதற்குள் மற்ற வீரர்கள் தடுத்து நிறுத்தினர்.

“>

இருப்பினும், ஆடை மாற்றும் அறைக்குச் செல்லும் வழியிலும் வைபவ் இலங்கை வீரர்களை நோக்கிக் கையை நீட்டி எச்சரித்தபடியே சென்றார். மைதானத்தைப் போர்க்களமாக மாற்றிய இந்த மோதல் தொடர்பான காணொளி தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி, ரசிகர்களிடையே பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

“>