அமெரிக்காவின் டெக்சாஸில் பிளான்டர்ஸ்வில்லி என்ற அடர்ந்த வனப்பகுதி உள்ளது. கடந்த 2021- ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கிறிஸ்டோபர் ராமிரெஸ் என்ற 3 வயது சிறுவன் தனது பக்கத்து வீட்டு நாயை, பின்தொடர்ந்து சென்று காணாமல் போய் உள்ளார்.  இதனையடுத்து பெற்றோர்கள் அவனை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனால் அவரது தாயார் அராசெலி நுனேஸ், சிறுவன் கடத்தப்பட்டதாக மிகவும் அஞ்சினார்.

இந்நிலையில் சிறுவனை கண்டுபிடிக்க, பிளான்டர்ஸ்வில்லியில் (Plantersville) ஒரு பெரிய தேடுதல் குழு அமைக்கப்பட்டது. ஆனால் டிம் என்ற நபர், சிறுவனின் வீட்டிலிருந்து 5 மைல் தூரத்தில் உள்ள ஒரு வனப்பகுதியில் இருந்து அந்தச் சிறுவனை மீட்டு வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக இன்சைட் எடிசனிடம் டிம் தெரிவித்துள்ளதாவது, நான் பைபிள் படிக்கும் வகுப்பில் இருந்தேன். அப்போது தேடுதலை பற்றி கேள்விப்பட்டதும், சிறுவனை தேடி காட்டிற்குள் சென்றேன். இதனையடுத்து அந்த சிறுவனை அவனது வீட்டில் இருந்து 5 மைல் தூரத்தில் உள்ள காட்டுப் பகுதியில் கண்டுபிடித்தேன். மேலும் அவன் கண்ணில் ஒரு சிறு துளி கண்ணீர் கூட இல்லாமல் மிகவும் அமைதியாக காணப்பட்டான். அதன்பின் வழியில் எங்கேயோ அவனது ஆடைகளை இழந்து  நிர்வாணமாகவும், காலில் செருப்பு இல்லாமலும் காணப்பட்டான். இந்நிலையில் 4 நாட்களுக்குப் பிறகு, வனப்பகுதியில் இருந்து சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டது ஒரு பெரிய அதிசயம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.