தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் பாப் டு பிளெஸ்சிஸ் (Faf du Plessis), அடுத்த ஐ.பி.எல். (IPL 2026) தொடரில் இருந்து விலகுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது, அவரது ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 14 ஆண்டுகளாக ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் (DC) ஆகிய அணிகளுக்காக விளையாடி தனக்கெனத் தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் டு பிளெஸ்சிஸ்.
டு பிளெஸ்சிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “14 ஐபிஎல் சீசன்களுக்குப் பிறகு, இந்த ஆண்டு ஏலத்தில் என் பெயரை வைக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன். இது ஒரு பெரிய முடிவு.
இந்தியா என் கிரிக்கெட் பயணத்தின் ஒரு பகுதியாக இருந்தது. இது நிச்சயமாக விடைபெறல் அல்ல, நீங்கள் என்னை மீண்டும் பார்ப்பீர்கள்” என்று உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.
மேலும், “இந்த ஆண்டு, நான் ஒரு புதிய சவாலை ஏற்றுக்கொள்ளத் தேர்வு செய்துள்ளேன். வரவிருக்கும் பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) சீசனில் விளையாடுவேன்” என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். புதிய நாடு, புதிய சூழல், புதிய சவால்களை எதிர்கொள்ள விரும்புவதே இந்த முடிவுக்குக் காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.
