இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனக்கு ரயில் பயணத்தின்போது நேர்ந்த கசப்பான அனுபவத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இனெஸ் ஃபாரியா என்ற அந்தப் பெண் ரயிலில் பயணம் செய்தபோது சில இளைஞர்கள் அவரைத் தொடர்ந்து நோட்டமிட்டதுடன் அவர் கழிப்பறைக்குச் சென்றபோது பின் தொடர்ந்து வந்து கதவைத் திறக்க முயன்றதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தச் சம்பவத்தால் மிகுந்த அச்சமடைந்த அவர் தனது தோழியின் உதவியுடன் அங்கிருந்து தப்பியதோடு இது குறித்து உடனடியாக ரயில்வே அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பெண்ணின் புகாரைப் பரிசீலித்த ரயில்வே ஊழியர்கள் மற்றும் பயணச்சீட்டுப் பரிசோதகர் அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்து பாதுகாப்பான உயர்வகுப்புப் பெட்டிக்கு மாற்றியுள்ளனர்.
ரயில்வே துறையின் இந்த உடனடி நடவடிக்கைக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ள அந்தப் பெண் பாதுகாப்பற்ற சூழலில் இருப்பவர்கள் ரயில் உதவி செயலியைப் பயன்படுத்துமாறு மற்ற பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்துப் பல்வேறு தரப்பினரும் தங்களது கவலைகளையும் கண்டனங்களையும் பதிவு செய்து வருகின்றனர்.
