பெங்களூரைச் சேர்ந்தவர் ரேஷ்மா (29). இவருக்கும், சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த அசோக் என்பவருக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட குடும்பப் பிரச்சினை காரணமாக அவரைப் பிரிந்த ரேஷ்மா, கடந்த இரண்டு மாதங்களாகத் தனது பிள்ளைகளுடன் தனியாக வசித்து வந்தார். ரேஷ்மா தனியாக வசிப்பதை அறிந்த அவரது அத்தை மகனான விஜி, அடிக்கடி ரேஷ்மாவின் வீட்டிற்கு வந்து தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தித் தகராறு செய்துள்ளார்.
சம்பவத்திற்கு முந்தைய நாள் இரவு ரேஷ்மாவின் வீட்டிற்கு வந்த விஜி, “நீ என்னுடன் வாழாவிட்டால் யாரோடும் வாழ முடியாது, உன்னைக் கொலை செய்துவிடுவேன்” என மிரட்டிச் சென்றுள்ளார். இதனால் பயந்த ரேஷ்மா, அன்றைய இரவு தனக்குத் துணையாகத் தோழி மரியா மற்றும் அவரது சகோதரி ஜெனிஃபர் ஆகியோரைத் தனது வீட்டில் தங்க வைத்துள்ளார்.
மறுநாள் அதிகாலை 3:30 மணியளவில் மீண்டும் வந்த விஜி, கதவு பூட்டப்பட்டிருந்ததால் ஜன்னல் வழியாகக் கையை நுழைத்துக் கதவைத் திறந்து அத்துமீறி உள்ளே நுழைந்துள்ளார். அங்கிருந்த மரியாவும் ஜெனிஃபரும் போலீசாரை அழைக்க முயன்றபோது, தான் மறைத்து வைத்திருந்த பெப்பர் ஸ்பிரேயை அவர்கள் முகத்தில் அடித்துக் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளார். பின்னர், ரேஷ்மா சுதாரிப்பதற்குள் தான் தயாராக வைத்திருந்த கத்தியால் அவரது முகம், கை, கால், கழுத்து எனப் பல இடங்களில் கொடூரமாக விஜி வெட்டியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த ரேஷ்மா, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் விஜி அங்கிருந்து தப்பியோடினார். தகவலறிந்து வந்த போலீசார், ரேஷ்மாவின் உடலைக் கைப்பற்றித் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள விஜியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
