மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் உள்ள நாக்டா பகுதியில் உள்ள சவுத்ரி மருத்துவமனையில் நேற்று அதிர்ச்சிக்கரமான சம்பவம் ஒன்று நடந்தது. சன்னி கெஹ்லோட் (30) என்பவர் மார்பு வலி காரணமாக மருத்துவர் சுனில் சவுத்ரியிடம் சிகிச்சைக்காக வந்தார். ஆனால், சிகிச்சை தொடங்குவதற்குள் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக நிலைமை கைமாறியதை உணர்ந்த மருத்துவர், சன்னியின் நாடித்துடிப்பு நின்றுவிட்டதை அறிந்து, மின்சார அதிர்ச்சி (shock) மற்றும் CPR (மனிதனால் அழுத்தும் இதய புழக்கம்) வழங்க தொடங்கினார்.

 

தொடர்ந்து 12 முறை மின்சார அதிர்ச்சியும், 41 நிமிடங்கள் CPR அளிக்கப்பட்ட பிறகே சன்னியின் இதயத் துடிப்பு மீண்டும் செயல்படத் தொடங்கியது. இந்த முயற்சியில் மருத்துவர் மட்டுமின்றி, அவரது மருத்துவ குழுவினரும் இணைந்து பணியாற்றினர். சன்னியின் உயிரை மீட்டதற்காக சவுத்ரி மருத்துவ குழுவின் முயற்சி பலராலும் பாராட்டப்படுகிறது. தற்போது, சன்னி இந்தூரில் உள்ள மருத்துவமனையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த முழு சம்பவமும் மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்தக் காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. வீடியோவில், சன்னி நாற்காலியில் அமர்ந்தபோது திடீரென மயங்கி விழும் தருணம், பின்னர் மருத்துவர் மற்றும் ஊழியர்கள் அவரது உயிரைக் காப்பாற்ற போராடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. “வாழ்க்கைமிக முக்கியமான தருணங்களில் ஒரு மருத்துவர் செய்யும் செயலின் முக்கியத்துவம் என்ன என்பதை இந்த சம்பவம் மிகச் சரியாக காட்டுகிறது” என மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.