உத்தரப்பிரதேச மாநில ஹமீர்பூர் மாவட்டத்தில் கோட்வாலி பகுதியை சேர்ந்த பில்ராக் கிராமத்தைச் சேர்ந்த ராகுல் என்ற இளைஞர், ரூ.90,000 கொடுத்து கான்பூர் ரெவ்னா கிராமத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இரு குடும்பங்களின் சம்மதத்துடன் திருமணம் மிகுந்த சிறப்புடன் நடைபெற்றது. வீட்டில் வரவேற்பு விழா, விருந்து உள்ளிட்ட ஏற்பாடுகள் பரபரப்பாக நடந்தன. இதனால் வீடு முழுக்க உற்சாகம் நிலவியது.
இந்நிலையில், திருமணமான மூன்றாவது நாளன்று, மணமகள் ஒரு வாய்ப்பைப் பார்த்து வீட்டை வெளியே இருந்து பூட்டி விட்டு தப்பி ஓடிவிட்டார். காலை எழுந்த குடும்பத்தினர், மணமகள் இல்லாததையும், வீட்டில் இருந்த ₹80,000 மதிப்பிலான நகையும் ₹50,000 ரொக்கப்பணமும் மாயமானதையும் கவனித்தனர். கிராமத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளில், அந்த பெண் கதவை பூட்டி நடந்து செல்வது பதிவாகியுள்ளது.
தகவல் கிடைத்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். மணமகளின் உடைகள் வயலில் கிடைத்ததைக் கண்டதும், போலீசார் ட்ரோன் கேமராவையும் பயன்படுத்தி பரப்பளவில் தேடுதல் நடத்தியுள்ளனர். இருந்தும், அந்த பெண் எங்கு சென்றார் என்ற தகவல் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. திருமண மோசடியாக இது அமைந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
மணமகளை அறிமுகப்படுத்தி திருமணத்தை ஏற்பாடு செய்த தேவ்கரன் மற்றும் விஷன் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது ஒரு திட்டமிட்ட திருமண மோசடி சம்பவம் என கருதப்படுவதால், ரத் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு பல கோணங்களில் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
