கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் அருகே உள்ள கானாங்காடு பகுதியைச் சேர்ந்த சவரிராஜ் என்பவரின் மனைவி மேரி அக்சீலியா (33), நேற்று முன்தினம் இரவு வீட்டின் வராண்டாவில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர் ஒருவர், திடீரென அவரது கழுத்தில் இருந்த 4½ பவுன் தாலி சங்கிலியை பறிக்க முயன்றார். திடீரென பதறி எழுந்த மேரி அக்சீலியா, தாலியை இறுகப் பிடித்துக் கொண்டு “திருடன்… திருடன்…” என கூச்சலிடத் துவங்கினார்.
அதற்குள் அந்த மர்மநபர், தாலியை பலவந்தமாக இழுத்ததால், சங்கிலி அறுந்து அதில் இருந்து 3 பவுன் நகையை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றார். மனைவியின் அலறல் சத்தத்தை கேட்டு சவரிராஜ் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். ஆனால், அதற்குள் அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக மேரி அக்சீலியா அளித்த புகாரின் அடிப்படையில், வடபொன்பரப்பி போலீசார் வழக்குப் பதிவு செய்து, திருடனை பிடிக்க சிறப்பு விசாரணை நடத்தி வருகின்றனர். பாதுகாப்பில்லா வீட்டுவாசல்களில் இவ்வகை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
