கர்நாடக மாநிலம் பெங்களூரு வடக்கு நெலமங்களா தாலுகா பைதரஹள்ளி பகுதியைச் சேர்ந்த அன்னய்யா மற்றும் ரிது தம்பதியரின் இரண்டரை வயது குழந்தை, வீட்டுத் தரைதளத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சிக்குச் செல்வதற்காகத் தம்பதியினர் தயாராகிக் கொண்டிருந்த நிலையில், அன்னய்யா தனது காரைக் கழுவுவதற்காகத் தண்ணீர் தொட்டியைத் திறந்து வைத்துள்ளார். பின்னர் வீட்டுக்குள் ஏதோ ஒரு பொருளை எடுப்பதற்காக அவர் சென்ற நேரத்தில், வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை எதிர்பாராதவிதமாகத் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தது.

வீட்டிற்கு வெளியே வந்த அன்னய்யா, குழந்தை தண்ணீர் தொட்டிக்குள் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனார். இது குறித்துத் தகவல் அறிந்த மாதநாயக்கனஹள்ளி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். குழந்தையின் உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர், பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண வீட்டிற்குச் செல்ல வேண்டிய நேரத்தில் குழந்தையைப் பறிகொடுத்த தம்பதியரின் நிலை அந்தப் பகுதியில் உள்ளவர்களிடையே மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.