கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கஞ்சிக்கோடு அருகே உள்ள ஏச்சன்புரம் பகுதியைச் சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் சுதேவனின் மகள் அஞ்சனா, பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுதி வந்த நிலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஐந்தாம் தேதி முதல் கேரளாவில் பொதுத்தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தேர்வு பயம் காரணமாக அஞ்சனா கடந்த சில நாட்களாகவே கடும் மனஅழுத்தத்தில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. வேதியியல் தேர்வு நடைபெற இருந்த அன்று காலை வெகுநேரமாகியும் அஞ்சனா தனது அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த பெற்றோர் கதவை உடைத்துப் பார்த்தபோது அவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாளையார் காவல்துறையினர், மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சில பாடத் தேர்வுகளை எழுதுவதில் அவருக்கு இருந்த பயமே இந்த விபரீத முடிவுக்குக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், பொதுத்தேர்வு பயத்தால் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.