இந்தியாவின் முன்னணி தொழில்துறை நிறுவனங்களில் ஒன்றான டாடா சன்ஸ் (Tata Sons) அமைப்பின் தலைவர் என். சந்திரசேகரன் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளதாக வெளியாகியுள்ள அறிவிப்பு, இந்திய வர்த்தக உலகையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராகப் பொறுப்பேற்ற இவரது தற்போதைய பதவிக்காலம் வரும் 2027-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை உள்ள நிலையில், காலக்கெடு முடிவதற்கு முன்பாகவே இவர் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார்.
இந்தத் திடீர் பதவி விலகல் முடிவுக்கு டாடா டிரஸ்ட் தலைவர் நோயல் டாடா மற்றும் சந்திரசேகரன் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளே முக்கியக் காரணம் என்று கார்ப்பரேட் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. நிறுவனத்தின் எதிர்கால திட்டங்கள் மற்றும் நிர்வாக முடிவுகள் தொடர்பாக இருவருக்கும் இடையே நீடித்து வந்த முரண்பாடுகள், இறுதியாக சந்திரசேகரனின் இந்த ராஜினாமா முடிவில் கொண்டு போய் முடிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சந்திரசேகரனின் இந்தப் பதவி விலகல் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, பங்குச் சந்தையில் டாடா குழுமத்தைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்களின் பங்குகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவும் நிச்சயமற்ற தன்மையால், டாடா குழுமப் பங்குகள் சுமார் 4 சதவீதம் வரை உடனடி சரிவைக் கண்டு வணிக உலகினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளன.
நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ், டாடா மோட்டார்ஸ், ஏர் இந்தியா, டைட்டன் மற்றும் டாடா ஸ்டீல் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களை நிர்வகிக்கும் தாய் நிறுவனமாக டாடா சன்ஸ் செயல்பட்டு வருகிறது. இத்தகைய பிரம்மாண்டமான கார்ப்பரேட் பேரரசை பல ஆண்டுகளாக வெற்றிகரமாக வழிநடத்தி வந்த தலைவர் திடீரென விலகுவது, டாடா குழுமத்தின் அடுத்தகட்ட தலைமை மாற்றம் குறித்து பல கேள்விகளையும் எதிர்பார்ப்புகளையும் உருவாக்கியுள்ளது.
