கிரிக்கெட் களத்தில் ரன்களைக் குவிக்கத் தடுமாறினாலும், நிஜ வாழ்க்கையில் மக்களின் இதயங்களை வென்று வருகிறார் சஞ்சு சாம்சன். கேரளாவின் பாலக்காடு அருகே முண்டூர் – தூதா சாலையில் கார் பயணத்தின் போது, தொலைபேசி அழைப்பிற்காகச் சஞ்சு சாம்சன் சற்று நேரம் ஒதுங்கினார். அப்போது அங்கு வந்த ஷபரீஷ் என்ற கேபிள் டெக்னீஷியன் சஞ்சுவுடன் செல்பி எடுக்க முயன்றார்.

அப்போது ஷபரீஷின் மொபைல் போன் திரை உடைந்து போயிருப்பதைக் கவனித்த சஞ்சு, சற்றும் யோசிக்காமல் தனது காரின் பின் இருக்கையில் இருந்த சுமார் ₹30,000 மதிப்புள்ள புத்தம் புதிய ஸ்மார்ட்போனை அவருக்குப் பரிசளித்துள்ளார். இந்த எதிர்பாராத அன்பு ரசிகரை மட்டுமல்லாது ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் நெகிழ வைத்துள்ளது.

 

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு மாறிய சஞ்சு சாம்சன், முதல் மூன்று போட்டிகளில் 6, 7, 9 ரன்கள் மட்டுமே எடுத்து ஃபார்ம் இன்றித் தவித்து வருகிறார். சிஎஸ்கே அணியும் தொடர் தோல்விகளைச் சந்தித்து வரும் நிலையில், சஞ்சுவின் இந்தச் செயல் அவருக்குப் புதிய ஆதரவைத் தேடித்தந்துள்ளாது.

கோழிக்கோட்டிலிருந்து கோவை நோக்கிச் சென்றபோது தற்செயலாக நடந்த இந்தச் சந்திப்பில், ரசிகர்களிடம் நலம் விசாரித்துத் தானாகவே முன்வந்து உதவி செய்த சஞ்சுவின் செயல் “மனுஷன் மனசு தங்கம்யா” என ரசிகர்களைச் சொல்ல வைத்துள்ளது. களத்தில் சறுக்கினாலும் கருணையில் அவர் என்றும் ‘கேப்டன்’ தான் என சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலாகி வருகிறது.