ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள், கடந்த சில தினங்களுக்கு முன் மன்னார் வளைகுடா கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றபோது, வலையில் அரியவகை ‘டூம்ஸ்டே’ மீன் ஒன்று சிக்கியது. சுமார் 5 அடி நீளமுள்ள இந்த மீன், ஆசியாவின் ஆழ்கடல் பகுதிகளில் மட்டுமே காணப்படும் மிகக் கடுமையான பருவநிலை மீன்களில் ஒன்று என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த மீன் பாம்பன் கரைக்கு கொண்டு வரப்பட்டதும், ஆச்சரியமும், பயமும் கலந்த பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பானிய நம்பிக்கையின் படி, ‘டூம்ஸ்டே மீன்’ என்பதற்கு “இது கடலில் பிடிபடும் பட்சத்தில், பூமியில் எங்காவது ஒரு பேரழிவு நிகழும்” என்ற ஒரு மூடநம்பிக்கை நிலவுகிறது.
இதே காரணத்தால், பாம்பனில் இந்த மீன் கரை திரும்பிய செய்தி, சமூக வலைதளங்களில் தீயாய் பரவி, மக்கள் மத்தியில் பல்வேறு விமர்சனங்கள் மற்றும் பயங்களை தூண்டியுள்ளது. சிலர் “இந்த மீன் சிக்கிய நாளிலிருந்தே வானிலை வேற மாதிரியா இருக்கு.” எனக் கருத்து பதிவிட, இன்னொருப்பக்கம் “இது வெறும் இயற்கை நிகழ்வு; பயப்பட வேண்டாம்” என வேறு குழு விளக்கம் அளிக்கின்றனர்.
ஆனால், மிக அரிதாகவே காணப்படும் இந்த மீன், அதிக விலை பெறும் என எதிர்பார்க்கப்பட்ட போதும், மிக குறைந்த விலைக்கே விற்பனை செய்யப்பட்டிருப்பது வேதனையையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது. “இந்த மாதிரி உயிரினங்களை பாதுகாக்க அரசு முன்வர வேண்டிய நேரம் இது தான்” என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது, இந்த டூம்ஸ்டே மீன் சம்பவம் குறித்து மீன்வளத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
