திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகே ஏலூர்பட்டி சாலையோரத்தில் வசித்து வரும் சபிதா (27), தனது மூன்று குழந்தைகளான பிரஜீத் (8), ரஞ்சித் (5), ரக்சிதா (1.5) ஆகியோருடன் நேற்று இரவு வீட்டில் இருந்துள்ளார். அப்போது, ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர், இருசக்கர வாகனத்தை வீட்டின் முன் நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்துள்ளார்.

சபிதா சந்தேகத்துடன் அவரிடம் யார் என்று கேள்வி கேட்டபோது, அந்த நபர் திடீரென கத்தியை எடுத்து, சபிதாவின் குழந்தை ரக்சிதாவின் கழுத்தில் வைத்து மிரட்டி, வீட்டில் உள்ள நகை, பணத்தை எடுத்து கொடுக்குமாறு மிரட்டியுள்ளார். அதனால் பயந்துபோன சபிதா, தன்னிடம் இருந்த தோடு, மூக்குத்தி, மோதிரம் உள்ளிட்ட 3 பவுன் நகைகளை கொடுத்துள்ளார். பின்னர், வீட்டில் வேறு எதுவும் இல்லை என்று கூறியதும், சத்தம் போடக்கூடாது என மிரட்டி, அந்த மர்ம நபர் தனது வாகனத்தில் தப்பி ஓடினார்.

இதுகுறித்து தகவலறிந்த காட்டுப்புத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும், திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம், முசிறி துணை சூப்பிரண்டு சுரேஷ்குமார், இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் நேரில் வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

சம்பவம் நடந்த நேரத்தில் சபிதாவின் கணவர் வீட்டில் இல்லாததும், அவர் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் தொழிலில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. மர்ம நபரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.