ஒடிசா மாநிலம் பூரி மாவட்டத்தை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி, கடந்த சனிக்கிழமை மதியம் தனது காதலனுடன் பாலிஹர்சந்தி கடற்கரை அருகே உள்ள வனப்பகுதிக்கு சென்றிருந்தார். அங்கு தனிமையில் பேசியுக்கொண்டிருந்த இக்காதல் ஜோடியை, அருகே மறைந்திருந்த ஒரு இளைஞர்கள் கும்பல் தங்கள் செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் காதலன், அவர்கள் எடுத்ததை டெலிட் செய்யுமாறு கேட்டுள்ளார்.

ஆனால் அந்த இளைஞர்கள் பணம் தர வேண்டும் என கூறி மிரட்டியுள்ளனர். பணம் கொடுக்க மாணவியும் காதலனும் மறுத்ததையடுத்து, அந்த கும்பல் ஆத்திரத்தில் மாணவியின் காதலனை அடித்து தாக்கியது. இதற்குப் பிறகு, அந்த வனப்பகுதியில் வைத்து மாணவியை அந்தக் கும்பல் கடுமையாகக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து தப்பிச் சென்றது. இதில் மாணவி மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் வீடு திரும்பிய பிறகு, நேற்று மாலை போலீசில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள ஒருவரை பிடிக்க விசாரணை வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த கொடூர சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் பாதுகாப்பு குறித்து பல தரப்பினரும் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளனர்.