உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மகராஜ்கஞ் மாவட்டத்திலுள்ள லால்பூர் கிராமத்தில் சமீப காலமாக சிறுத்தை புலி நடமாட்டம் அதிகமாக உள்ளதாக பொதுமக்கள் அச்சத்தில் இருந்துள்ளனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கும் புகார் அளித்துள்ளனர். ஆனால் வனத்துறையினர் இது குறித்து சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் கிராமப்புறத்தில் உள்ள இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் சிலர் தாங்களே சிறுத்தை புலியை பிடிப்பதற்கு முடிவு செய்துள்ளனர்.

இப்படி அனைவரும் ஒன்றாக இணைந்து திட்டம் தீட்டி சிறுத்தை புலியை பிடித்துள்ளனர். இதில் இளைஞர் ஒருவர் சிறுத்தை புலியின் கழுத்தை நெரிப்பது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. சிலர் சிறுத்தையின் கை, கால்களை பிடித்து இழுத்தும், கழுத்தைப் பிடித்து நெரித்ததால் சிறுத்தை புலி மூச்சுத் திணறுவது போல இருந்தது. இந்த வீடியோவுக்கு பலரும் கலவையான விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.