தமிழகத்தில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள “சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை” தவெகவின் ஆளுங்கட்சி நிர்வாகிக்கு எதிராகவே முதல் வழக்கைப் பதிவு செய்துள்ளதாகக் கூறி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் விஜய் மீது மிகக் கடுமையான விமர்சனக் கணைகளைத் தொடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள காரசாரமான அறிக்கையில், பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் சிக்கிய தவெக எம்.எல்.ஏ ஒருவருக்கு வக்காலத்து வாங்கி, அந்த விவகாரத்தைச் சமரசம் பேசி மறைக்க முயன்ற ஆளுங்கட்சிப் பிரமுகர் மீதுதான் இந்த சிங்கப்பெண் படையின் முதல் வழக்கே பாய்ந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

“பெண்களைப் பாதுகாப்போம் என்று மேடைக்கு மேடை பில்டப் கொடுக்கும் முதலமைச்சரே, பாலியல் குற்றவாளிக்குத் துணை நின்ற உங்கள் சொந்தக் கட்சி எம்.எல்.ஏ-வை உடனடியாகப் பதவியை ராஜினாமா செய்ய வைத்து, அவரைக் கைது செய்ய வைப்பதற்குக் கொஞ்சமாவது உங்களுக்குத் தெம்பும் திராணியும் இருக்கிறதா?” என்று இபிஎஸ் ஓப்பனாகவே சவால் விட்டுள்ளார்.

தவெகவின் சிங்கப்பெண் படைச் சேவையைச் சுட்டிக்காட்டியே, அவர்களின் சொந்தக் கட்சி அவலத்தை எடப்பாடி பழனிசாமி அக்குவேறு ஆணிவேறாகத் தோலுரித்துக் காட்டியிருப்பது தற்போதைய தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.