ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பந்திபோரா மாவட்டத்தில் உள்ள வுலர் ஏரி தெற்காசியாவின் மிகப்பெரிய நன்னீர் நீர்நிலைகளில் ஒன்றாகும். அந்த ஏரியில் தாமரை அறுவடை செய்வது முக்கிய உள்ளூர் வாழ்வாதாரமாக இருந்தது.
அந்த ஏரியில் கடந்த 1992 ஆம் ஆண்டு ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கால் ஏரியின் உருவம் மாறி முழுவதும் வண்டல் மண்ணால் சூழப்பட்டது. அதன் பின் அப்பகுதியில் தாமரை மலர்கள் முழுவதுமாக அழிந்ததால் உள்ளூர்வாசிகள் கடும் பாதிப்புக்குள்ளாகினர்.
அதனை மீட்டெடுப்பதற்காக பல்வேறு அமைப்புகளும் வண்டல் மண்ணை அகற்றி தாமரை மலர்களை வளர வைப்பதற்காக முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் அது முடியாமல் போனது.
தற்போது 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஏரியில் உள்ள வண்டல் மண் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றப்பட்டு. அதில் தாமரை விதைகள் துவப்பட்டன. தற்போது ஏரியில் தாமரை மலர்கள் பூத்துக் குலுங்கி அந்த ஏரியையே மெருகேற்றி உள்ளது.
குறிப்பாக குளிர்காலங்களில் இந்த தாமரைத் தண்டுகளின் அறுவடை என்பது பருவ கால வேலைவாய்ப்பை உள்ளூர் மக்களுக்கு வழங்கி வந்தது. காஷ்மீரி மக்கள் இந்த ஏரியில் உள்ள தாமரைத் தண்டுகளை பயன்படுத்தி சுவையான உணவுகளை சமைத்து சாப்பிடுவது வழக்கம்.
இந்நிலையில் தாமரை மலர்கள் ஏரி முழுவதும் வளர்ந்திருப்பது ஏரி மீண்டும் மறு சீரமை ப்பு நோக்கி செல்கிறது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது என அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகின்றனர்.
