சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி வரும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நேரடி மோதல் வெடித்துள்ளது. கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அரபு நாடுகள் மற்றும் இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தியதுடன் ஹர்முஸ் ஜலசந்தியையும் மூடியது. இதனால் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் கடுமையாக உயர்ந்தது.

பின்னர் பாகிஸ்தான் மற்றும் கத்தார் நாடுகளின் சமரச முயற்சியால் அமெரிக்கா – ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. எனினும், ஹர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்களுக்குக் கட்டணம் விதிக்கப்படும் என்றும், அனுமதியின்றி கடக்கும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் ஈரான் எச்சரித்திருந்தது. அதன் தொடர்ச்சியாகக் கடந்த மாதமும், நேற்றும் ஓமன் வளைகுடாவின் லிமாஹ் பகுதி அருகே சென்ற 3 சரக்கு கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது.

ஈரானின் இந்தத் தொடர் அத்துமீறல்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிக்க ராணுவம் இன்று ஈரான் மீது கடுமையான வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. தெற்கு ஈரானில் உள்ள சிரிக், குவாசிம் தீவு, பண்டர் அப்பாஸ் மற்றும் கார்க் தீவு ஆகிய பகுதிகளைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதில் ஈரானின் அதிநவீன ரேடார் அமைப்புகள், ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் முக்கிய ஆயுதக் கிடங்குகள் உள்ளிட்ட சுமார் 80 ராணுவ இலக்குகளை அமெரிக்கா முற்றிலும் அழித்துள்ளது. ஏற்கனவே கப்பல் போக்குவரத்து பாதிப்பால் உலக நாடுகள் கவலையடைந்துள்ள நிலையில், அமெரிக்காவின் இந்த அதிரடிப் பதிலடித் தாக்குதலால் மத்திய கிழக்கு பகுதியில் மீண்டும் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. மேலும் ஈரான் நாட்டின் முன்னாள் உச்ச தலைவர் காமேனி இறுதி சடங்கு நடைபெறும் வேலையில் தற்போது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது உலக அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.