அயர்லாந்து தொடரைத் தொடர்ந்து தற்போது இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலும் உலக சாம்பியனான இந்திய கிரிக்கெட் அணியின் மோசமான வீழ்ச்சி நீடித்து வருகிறது. நேற்று நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில், இந்திய அணி வெறும் 76 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. இங்கிலாந்து நிர்ணயித்த 202 ரன்கள் என்ற கடினமான இலக்கை துரத்திய இந்திய அணியால் வெறும் 11.4 ஓவர்கள் மட்டுமே பேட்டிங் செய்ய முடிந்தது. இறுதியில் இங்கிலாந்து அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் ரன்கள் அடிப்படையில் இந்திய அணி சந்திக்கும் மிகப்பெரிய தோல்வி இதுவாகும். இந்திய அணியில் ஒரு வீரர் கூட 20 ரன்களைத் தாண்டவில்லை; அதிகபட்சமாக வைபவ் சூர்யவன்ஷி, இஷான் கிஷன் ஆகியோர் தலா 13 ரன்களும், அபிஷேக் சர்மா மற்றும் அக்சர் படேல் தலா 10 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் ஜோஷ் டங் 4 விக்கெட்டுகளையும், ஜோஃப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்திய அணியை வீழ்த்தினர்.

இந்த மோசமான தோல்விக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் சக வீரர்கள் மீது கடும் அதிருப்தியையும் கோபத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். அவர் பேசுகையில், “இவ்வளவு பெரிய ரன் வித்தியாசத்தில் தோற்றதை ஏற்றுக்கொள்ளவே முடியாது, இதை என்னால் சகித்துக்கொள்ளவும் முடியாது. நாங்கள் தோற்றுவிட்டோம் என்பதை ஒப்புக்கொண்டு, மீண்டும் சென்று தவறுகளை ஆராய வேண்டும். இது 200 ரன்கள் அடிக்கக்கூடிய பிட்ச் கிடையாது. பவர்-பிளேயிலேயே 4 விக்கெட்டுகளை இழந்ததால் நாங்கள் ஆட்டத்தை விட்டு பின்னுக்குத் தள்ளப்பட்டோம். மைதானத்திற்கு வெளியே எவ்வளவுதான் திட்டமிட்டாலும், உள்ளே சென்று அதைச் சரியாகச் செயல்படுத்த வேண்டும்.

இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் ஹார்ட் லென்த்தில் பந்துவீசி ரன் கொடுக்காமல் நெருக்கடி தந்தனர், ஆனால் நாங்கள் அப்படி வீசவில்லை. வரலாற்றில் என்ன நடந்தது என்று தோண்டுவதில் அர்த்தமில்லை; இனி நாங்கள் பலமாக மீண்டு வர வேண்டும். ஒவ்வொரு வீரரும் அணிக்கு எப்படி பங்களிக்க முடியும் என்று சிந்தித்து விளையாட வேண்டும் என வீரர்களின் காதை திருகியுள்ளார். டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகும் சூர்யகுமார் யாதவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட்டு ஷ்ரேயாஸ் ஐயரிடம் பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனால், அவர் கேப்டனான பிறகு அயர்லாந்திடம் 2 போட்டிகளில் தோல்வி, இங்கிலாந்துடன் முதல் போட்டி மழையால் ரத்து, அடுத்த 2 போட்டிகளில் தோல்வி என 5 போட்டிகள் முடிந்தும் தனது முதல் வெற்றிக்காக இன்னும் ஆவலோடு காத்திருக்கிறார்.