உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டம் மோடிநகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதிக்குள் இன்று திடீரென புகுந்த இந்து அமைப்பினர், அங்கிருந்த அறை ஒன்றில் தங்கியிருந்த இளம் ஜோடியை வலுக்கட்டாயமாக வெளியே இழுத்து வந்து தாக்குதல் நடத்தினர். அப்போது அரைகுறை ஆடையுடன் இருந்த அந்தப் பெண்ணையும், இளைஞரையும் பிடித்துக் கொண்டு அவர்களின் பெயர் மற்றும் அடையாள அட்டைகளை வழங்குமாறு கூறி கும்பல் அச்சுறுத்தியது.

 

அந்த இளைஞர் தன்னைத் தாக்கியவர்களிடம் கெஞ்சிய போதிலும், கும்பல் அவரைத் தொடர்ந்து தாக்கியது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காசியாபாத் காவல்துறை, மோடிநகர் காவல் நிலைய அதிகாரி தலைமையில் தீவிர விசாரணை நடத்தி சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

இதேபோன்று மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் ஓடும் இருசக்கர வாகனத்தில் இளம் ஜோடி ஒன்று அநாகரீகமான முறையில் நடந்து கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது. சாகர் முதல் கான்பூர் வரையிலான நெடுஞ்சாலையில் பட்டப்பகலில் சென்ற அந்த வாகனத்தில், மற்ற பயணிகளைப் பற்றி கவலைப்படாமல் இருவரும் ஒருவரை ஒருவர் முத்தமிட்டபடி ஆபத்தான முறையில் பயணித்தனர்.

அங்கிருந்த வழிப்போக்கர் ஒருவர் இதனைத் தனது கைப்பேசியில் படம்பிடித்து இணையத்தில் பகிரவே, பொது இடங்களில் இது போன்ற அநாகரீக செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மோட்டார் வாகன விதிகளையும் பொது ஒழுக்கத்தையும் மீறிய இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.