மத்தியப் பிரதேச மாநிலம் உமரியா மாவட்டத்தில் புகழ்பெற்ற பந்தவ்கர் தேசிய பூங்கா அமைந்துள்ளது. இந்தப் பூங்காவை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் வனவிலங்குகள் புகுவது தொடர்கதையாகி வரும் நிலையில், நேற்று மதியம் திடீரென புலி ஒன்று ஊருக்குள் நுழைந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் அலறியடித்துக்கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர். அப்போது, கோபால் என்ற இளைஞரை புலி பாய்ந்து தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். புலியிடமிருந்து தப்பிக்க கிராமத்தினர் பலர் வீடுகளின் மேற்கூரையில் ஏறி நின்று சத்தம் எழுப்பியதால் அந்தப் பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு புலிக்கு மயக்க ஊசி செலுத்தி அதைப் பிடித்தனர். பிடிபட்ட புலி கூண்டில் அடைக்கப்பட்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடப்பட்டது. புலி தாக்கியதில் இளைஞர் காயமடைந்த சம்பவம் மற்றும் ஊருக்குள் புலி புகுந்த விவகாரம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பாதுகாப்பை பலப்படுத்த கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
