ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தை  சேர்ந்த வெங்கட காமேஷ் என்ற வாலிபர், மேட்ரிமோனி (திருமண இணையதளம்) மூலம் சாஃப்ட்வேர் நிறுவனங்களில் வேலை பார்க்கும் இளம்பெண்களைக் குறிவைத்து பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அதாவது தனக்கு ₹200 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாகவும், தனக்கு ஏற்ற தகுதியான பெண் தேவை என்றும் அவர் திருமண இணையதளத்தில் போலி விளம்பரம் செய்துள்ளார். இந்த ஆடம்பர விளம்பரத்தை நம்பி, தகவல் தொழில்நுட்பத் துறையில்பணிபுரியும் ஏராளமான படித்த இளம்பெண்கள் அவரைத் தொடர்பு கொண்டுள்ளனர். தன்னைத் தொடர்பு கொண்ட பெண்களைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறிய வெங்கட காமேஷ், தனது அவசரத் தொழில்துறை தேவைக்காகப் பணம் வேண்டும் எனக் கூறி ஒவ்வொரு பெண்ணிடமும் லட்சக்கணக்கில் பணத்தைப் பறித்துள்ளார்.

அப்படி ஏமாற்றிய பணத்தை வைத்து அவர் ஆன்லைன் சூதாட்டங்களில் ஈடுபட்டு ஊதாரித்தனமாக அழித்து வந்துள்ளார். இந்நிலையில், அவரிடம் பல லட்சம் பணத்தைக் கொடுத்து ஏமாந்த ஐடி இளம்பெண் ஒருவர், தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வெங்கட காமேஷை வற்புறுத்தியுள்ளார். ஆனால், அவர் பல்வேறு காரணங்களைக் கூறி நாட்களைக் கடத்தி வந்ததால், சந்தேகமடைந்த அந்தப் பெண் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து  சைபர் க்ரைம் போலீசில் பரபரப்பு புகார் அளித்தார்.

இதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், வெங்கட காமேஷை அதிரடியாகக் கைது செய்து, அவரிடம் ஏமாந்த பெண்கள் தைரியமாகப் புகார் அளிக்கலாம் என அறிவித்தனர். போலீசார் அறிவிப்பு வெளியான அடுத்த சில மணி நேரங்களிலேயே, பாதிக்கப்பட்ட 18 இளம்பெண்கள் வெங்கட காமேஷ் மீது அடுக்கடுக்கான மோசடி புகார்களைத் தெரிவித்து போலீஸ் நிலையத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர். இவனால் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்பதால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.