ஸ்டாண்ட்-அப் காமெடியன் பிரணித் மோரின் நகைச்சுவை நிகழ்ச்சியில், பெண்ணின் சம்மதத்தையும் அவளது உடலையும் வெறும் பணத்தோடு ஒப்பிட்டுப் பேசிய வாலிபரின் வீடியோ இணையத்தில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஹிமான்ஷு ஜங்ரா என்ற வாலிபர், தான் ஒரு பெண்ணுடன் டேட்டிங் சென்றபோது அவளுக்கு ₹370 மதிப்பில் சிக்கன் பிரியாணி வாங்கிக் கொடுத்ததாகக் கூறினார். அந்தப் பணத்தை ஈடுகட்டுவதற்காக (வசூல் செய்ய), அந்தப் பெண்ணுக்கு விருப்பம் இல்லை என்றாலும், அவள் தடுத்ததையும் மீறி அவளை வலுக்கட்டாயமாக முத்தமிட்டு, உடல்ரீதியாக அத்துமீறியதாக மேடையில் சிரித்துக்கொண்டே திமிராகப் பேசினார்.

அதிர்ச்சியூட்டும் விதமாக, அந்த வாலிபர் ஒரு பெண்ணுக்கு இழைத்த பாலியல் அத்துமீறலை பெருமையாகப் பேசும்போது, மேடையில் இருந்த காமெடியன் பிரணித் மோர் மற்றும் அங்கிருந்த பார்வையாளர்கள் அனைவரும் அதைத் தடுக்காமல் சிரித்து ரசித்தனர். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, வெறும் ₹370 பிரியாணிக்கு ஒரு பெண்ணின் சம்மதத்தையும் உடலையும் விலை பேசிவிட முடியுமா என்று நெட்டிசன்கள் தங்களது கடுமையான கண்டனங்களை தெரிவித்து  வருகின்றனர்.

பொதுமக்களின் இந்தத் தொடர் கொந்தளிப்பு மற்றும் புகார்களைத் தொடர்ந்து, காமெடியன் பிரணித் மோர் அந்த சர்ச்சை வீடியோவை உடனடியாகத் தனது சமூக வலைதளப் பக்கங்களில் இருந்து நீக்கினார். ஆனாலும், நெட்டிசன்களின் ஆக்ரோஷமான எதிர்மறை விமர்சனங்கள் ஓயாததால், தாள முடியாமல் தனது இன்ஸ்டாகிராம் கணக்கையே அவர் தற்காலிகமாக முடக்கியுள்ளார.

மேலும் ஒரு பெண்ணின் சுயமரியாதையைக் கொச்சைப்படுத்திப் பேசிய அந்த வாலிபரின் எண்ணம் மட்டுமல்ல, அதை அங்கு அமைதியாகக் கேட்டு ரசித்த ஒட்டுமொத்தக் கூட்டத்தின் எண்ண ஓட்டமும் வக்கிரமானது எனச் சமூக ஆர்வலர்கள் சாடி வருகின்றனர். இதற்கிடையே, ஒரு பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் கொடுமையை மேடையில் பெருமையாகப் பேசிய ஹிமான்ஷு ஜங்ராவை, அவர் வேலை பார்த்து வந்த நிறுவனம் அதிரடியாகப் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. இந்தச் சம்பவம் கார்ப்பரேட் மற்றும் சமூக வலைத்தள உலகையே தடம் புரளச் செய்துள்ளது.