உத்தரப் பிரதேச மாநிலம் மஹோபா மாவட்டத்தில் சொத்துக்காக ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் மற்றும் அவரது மாற்றுத்திறனாளி மகளை 5 ஆண்டுகளாக வீட்டிற்குள்ளேயே சிறைவைத்த கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ரயில்வேயில் மூத்த எழுத்தராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற ஓம் பிரகாஷ் சிங் ரத்தோர் என்பவர், தனது மனைவி மறைவுக்குப் பிறகு மனவளர்ச்சி குன்றிய மகள் ரஷ்மியுடன் வசித்து வந்தார்.
இவர்களைப் பராமரிக்க நியமிக்கப்பட்ட ராம் பிரகாஷ் குஷ்வாஹா மற்றும் அவரது மனைவி ராம் தேவி ஆகிய இருவரும், வீட்டின் ஒரு பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தந்தை மற்றும் மகளை ஒரு அறைக்குள் பூட்டி வைத்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அவர்களுக்குச் சரியான உணவு வழங்காமலும், உறவினர்களைச் சந்திக்க விடாமலும் தடுத்துக் கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
நீண்ட நாட்களாகப் பட்டினியால் வாடிய ஓம் பிரகாஷ் சிங் ரத்தோர் உரியப் பராமரிப்பின்றி உயிரிழந்தார். அவரது இறப்புச் செய்தி கேட்டு வீட்டிற்கு விரைந்த உறவினர்கள், அங்கிருந்த காட்சியைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர். எலும்புக்கூடு போன்ற நிலையில் மிகவும் மோசமான உடல்நலத்துடன் ஒரு இருட்டு அறைக்குள் அவரது மகள் ரஷ்மி மீட்கப்பட்டார்.
இது குறித்துத் தகவல் அறிந்த நகர காவல் நிலையப் போலிசார், ஓம் பிரகாஷின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சொத்தை அபகரிக்கும் நோக்கில் தந்தை மற்றும் மகளைச் சித்திரவதை செய்து வந்த அந்தத் தம்பதி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் குறித்துப் போலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
