பிரபல இந்திய-ஜெர்மன் பின்னணி பாடகி ஸ்வேதா ஷெட்டி, தனது குடும்பத்தில் நடந்த ஒரு நெகிழ்ச்சியான காதல் கதையை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அவரது 81 வயது உறவினர் (அண்ணன் முறை), ஒரு அறுவை சிகிச்சை நிபுணர், தற்போது 71 வயது பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள உள்ளார்.
அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு பாலிவுட் கரோக்கி பார்ட்டியில் சந்தித்துக் கொண்ட இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. வயதான காலத்தில் காதல் கொள்வதை சமூகம் பல நேரங்களில் கேலி செய்தாலும், அதையெல்லாம் கடந்து இந்த ஜோடி தங்களின் மகிழ்ச்சியை உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்த நெகிழ்ச்சியான தருணத்தைப் பகிர்ந்துள்ள ஸ்வேதா ஷெட்டி, “காதலுக்கு வயது ஒரு தடையல்ல” என்பதை இந்தத் திருமணம் நிரூபித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். பாடல்கள் பாடியும், ஒருவருக்கொருவர் அன்பைப் பரிமாறிக் கொண்டும் இந்த ஜோடி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
மேலும் “இன்னும் துணையைத் தேடிக் கொண்டிருக்கும் தனிமையில் உள்ள பெண்களுக்கு ஒரு நம்பிக்கை உள்ளது” என்று நகைச்சுவையுடன் ஸ்வேதா பதிவிட்டுள்ளார். இந்த முதிய ஜோடியின் புதிய வாழ்க்கையை இணையவாசிகள் பலரும் மனதார வாழ்த்தி வருகின்றனர்.
