தமிழ் சினிமாவின் இமயம் கிராமத்து மண் வாசனையை சினிமாவுக்கு கொண்டு வந்த இயக்குனர் பாரதிராஜா 84 வயதில் நேற்று உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவருடைய மகன் மனோஜின் திடீர் மரணம் அவரை மிகவும் பாதித்த நிலையில் அதிலிருந்து சோகத்துடனும் உடல் நலம் குன்றியும் காணப்பட்ட பாரதிராஜா நேற்று காலமானார்.

அவரது உடல் இன்று சொந்த ஊரான தேனியில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில் நேற்று முதலே திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் இன்று சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்ட பாரதிராஜா உடலுக்கும் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் நடிகர் வடிவேலு பாரதிராஜா உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வந்தார். அப்போது அவர் கண்ணீர் மல்க கை தாங்கலாக வந்த நிலையில் பாரதிராஜா உடலை பார்த்ததும் அடக்க முடியாமல் கண்ணீர் விட்டு கதறி அழுதார். பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினார். மேலும் பாரதிராஜாவின் கிழக்கு சீமையிலே திரைப்படத்தில் வடிவேலு நடித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.