நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயதான பிளஸ்-2 மாணவியுடன், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கருப்பன் (வயது 28) என்பவர் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளம் மூலமாகப் பழகி வந்துள்ளார். இந்த நிலையில், கருப்பன் அந்த மாணவிக்கு ஆசை வார்த்தைகளைக் கூறி, அவரைத் திருவண்ணாமலையில் உள்ள ஒரு அணைக்குப் வரவழைத்துள்ளார். அங்கு வைத்து அந்த மாணவியைக் கருப்பன் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, பள்ளி முடிந்து மாணவி வீட்டிற்கு வர ஏன் தாமதம் ஆனது என்று அவரது பெற்றோர் விசாரித்துள்ளனர். அப்போது தனக்கு நேர்ந்த கொடூரச் சம்பவத்தை அழுதுகொண்டே மாணவி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்தப் புகாரின் அடிப்படையில், அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த கருப்பனை அதிரடியாகக் கைது செய்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
