சென்னை உள்ள ஒரு பகுதியில் புதிய வீடு ஒன்றின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு தங்கி வேலை பார்க்கும் வடமாநிலத் தொழிலாளர்கள், நேற்று மரப்பலகைகளை அறுக்கும் பணியில் ஈடுபடத் தயாராகியுள்ளனர். இதற்காக மரம் அறுக்கும் எந்திரத்தை சாலையின் ஓரத்தில் வைத்த தொழிலாளர்கள், அதில் மின் இணைப்பு சரியாக வருகிறதா என்பதைப் பரிசோதிப்பதற்காக வீட்டின் உள்ளே சென்றுள்ளனர்.

அந்த நேரத்தில், அந்த வழியாக நடந்து வந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க வடமாநில வாலிபர் ஒருவர், திடீரென சாலையோரம் இருந்த மரம் அறுக்கும் எந்திரத்தின் அருகே சென்றுள்ளார். பின்னர் யாரும் எதிர்பாராத விதமாக, திடீரென எந்திரத்தை ஆன் செய்து தனது சொந்தக் கழுத்திலேயே வைத்து அறுத்துக் கொண்டுள்ளார்.

இதில் ரத்தம் பீறிட்டு பாய்ந்து, அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்த பொதுமக்களும் தொழிலாளர்களும் அலறியடித்தபடி ஓடிவந்து, உடனடியாக எந்திரத்தின் மின் இணைப்பைத் துண்டித்தனர்.இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து போரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உயிரிழந்த வாலிபரின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தற்கொலை செய்து கொண்ட வடமாநில வாலிபர் கடந்த சில தினங்களாகவே கடும் மன அழுத்தத்தின் காரணமாக இப்பகுதியில் தனியாகச் சுற்றித் திரிந்தது தெரியவந்துள்ளது. அவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர், அவரின் பெயர் என்ன போன்ற விவரங்கள் இன்னும் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.