உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில், ஒரே இளைஞரை காதலித்த விவகாரத்தில் இரண்டு இளம்பெண்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கான்பூர் யசோதா நகர் பைபாஸ் சாலையில் நடந்த இந்த வன்முறைச் சம்பவத்தில், வெள்ளை நிற உடை அணிந்த இளம்பெண் ஒருவர், மற்றொரு பெண்ணை தரதரவென இழுத்துச் சென்று சரமாரியாகத் தாக்கினார். “அபிஷேக்கை நீ தான் முதலில் பிரிந்தாய், இப்போது அவன் என்னுடையவன்; அவனை ஏன் இன்னும் ‘பாபு’ (செல்லப் பெயர்) என்று அழைக்கிறாய்?” என கத்திக்கொண்டே அந்தப் பெண் ஆவேசமாகத் தாக்குதல் நடத்தினார்.

பாதிக்கப்பட்ட பெண் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டும் விடாத அந்த கும்பல், அவரை தலைமுடியைப் பிடித்து கீழே தள்ளி சுமார் 11 முறை கன்னத்தில் அறைந்ததுடன், மார்பு மற்றும் தலையிலும் காலால் உதைத்து கொடூரமாகத் தாக்கியது. இந்தச் சம்பவத்தை அங்கிருந்த மற்றொரு தோழியும் வீடியோ எடுத்ததோடு மட்டுமின்றி, தானும் சேர்ந்து அந்தப் பெண்ணை எட்டி உதைத்தார். நடுரோட்டில் நடந்த இந்த கொடூரத் தாக்குதலை அங்கிருந்த பொதுமக்கள் வேடிக்கை பார்த்தார்களே தவிர, யாரும் தடுக்க முன்வரவில்லை. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அந்தப் பெண்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.