பெங்களூரு வையாலி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் இளம்பெண் ஒருவர் சமூக வலைதளங்களில் புகழ்பெற்ற காணொளி எடுப்பதற்காகத் தனது தந்தையின் உயிரோடு விளையாடிய அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தற்போது உகாதி மற்றும் ரம்ஜான் பண்டிகை காலங்களில் பேருந்து கட்டணம் உயர்ந்துள்ளதைக் கிண்டல் செய்யும் வகையில் ஒரு காணொளி எடுக்க அந்தப் பெண் திட்டமிட்டுள்ளார்.

இதற்காகத் தனது தந்தையைப் பெரிய சாக்கு மூட்டைக்குள் வைத்து கட்டித் தனது கணவர் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து ஒரு தனியார் கூரியர் அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். அந்த மூட்டையை மங்களூருக்கு பார்சல் செய்ய வேண்டும் என்று அவர் கூறியபோது மூட்டைக்குள் ஏதோ அசைவதைக் கண்டு சந்தேகமடைந்த ஊழியர்கள் அதனைப் பிரித்துப் பார்த்துள்ளனர்.

மூட்டைக்குள் முதியவர் ஒருவர் மூச்சுவிட முடியாமல் திணறிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாக அவரை மீட்டுப் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்தப் பெண்ணையும் அவரது குடும்பத்தினரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

பண்டிகை காலத்தில் மங்களூரு செல்ல பயணச் சீட்டு கிடைக்காத விரக்தியில் இவ்வாறு செய்ததாக அந்தப் பெண் வாக்குமூலம் அளித்துள்ளார். ஒரு முதியவரின் உயிரைப் பணையம் வைத்து இத்தகைய விபரீத செயலில் ஈடுபட்ட குடும்பத்தினரைக் கடுமையாக எச்சரித்த போலீசார் அவர்களிடமிருந்து மன்னிப்புக் கடிதம் மற்றும் வீடியோவைப் பெற்றுக்கொண்டு அனுப்பி வைத்தனர். சமூக வலைதள மோகத்தால் அரங்கேறிய இந்த வினோதச் சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.