உத்தரப்பிரதேச மாநிலம் எட்டாவாவில் மின்சாரக் கட்டண அதிர்ச்சியால் ஏழை தேநீர் விற்பனையாளர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சிறிய தேநீர்க் கடை நடத்தி வந்த அந்த முதியவருக்கு, வழக்கத்திற்கு மாறாக ரூ. 1.60 லட்சம் மின்கட்டணம் வந்ததைக் கண்டு அவர் நிலைகுலைந்து போனார்.
இந்தத் தொகையை எப்படிக் கட்டுவது என்ற கவலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த மரணத்தைத் தொடர்ந்து, ஆத்திரமடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள் உடலை மின்சார வாரிய அலுவலகத்தின் முன் வைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் மின்சார வாரியத்தின் அலட்சியமே இந்த உயிரிழப்புக்குக் காரணம் என உயிரிழந்தவரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். முறையான ஆய்வு இன்றித் தவறான கட்டணத்தை வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் உறுதி அளித்துள்ளது. இந்தத் துயரச் சம்பவம், சாமானிய மக்கள் எதிர்கொள்ளும் நிர்வாகக் குளறுபடிகளை மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
