டெல்லியில் உள்ள செங்கோட்டைக்கு மிக அருகில் சாந்தினி சௌக் பகுதியில் திங்கள்கிழமை ஒரு கார் வெடித்த பயங்கரச் சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நேரடிக் காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் கூட்டம் மிகுந்த பகுதியான செங்கோட்டை அருகே உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவாயில் எண் ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார், திடீரென பெரும் சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.

இந்தக் குண்டுவெடிப்பு நிகழ்வதற்குச் சில விநாடிகளுக்கு முன், ஒரு நபர் செய்தியாளரிடம், “யாராவது குண்டு வைக்க வந்தாலும், அவர்கள் எல்லையில் வைத்தே அழிக்கப்படுவார்கள்” என்று பேசும் காட்சி பதிவாகியுள்ளது.

இந்த வெடிப்பில், ஆரம்பத்தில் 8 பேர் பலியானதாகத் தகவல் வெளியான நிலையில், தற்போது உயிரிழப்பு 12 ஆக அதிகரித்துள்ளது. 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக டெல்லி போலீஸார் சட்டவிரோதச் செயல்பாடுகள் சட்டம் மற்றும் வெடிபொருள் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்து, புலனாய்வு நடத்தி வருகின்றனர்.

மேலும், தலைநகரில் மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க, விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து முக்கிய இடங்களிலும் உயர் பாதுகாப்பு போடப்பட்டு, நகரம் முழுவதும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.