மும்பை போவாய் பகுதியில் சனிக்கிழமை மதியம் 72 வயது முதியவர் ஓட்டி வந்த அதிவேகக் கார் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில், 15 வாகனங்கள் பலத்த சேதமடைந்தன. லோகண்ட்வாலா காம்ப்ளக்ஸ் பகுதியைச் சேர்ந்த உதய் சங்வி என்பவர் தனது மஹிந்திரா பி.இ-6 ரகக் காரை ஓட்டிச் சென்றபோது, பிரேக்கிற்குப் பதிலாக தவறுதலாக ஆக்ஸிலரேட்டரை அழுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதனால் தாறுமாறாக ஓடிய கார், அங்கு நிறுத்தப்பட்டிருந்த மற்றும் சாலையில் சென்றுகொண்டிருந்த கார்கள், இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 15 வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதியது. இந்த விபத்தில் சாஹேப்ராவ் பவார் மற்றும் பஞ்சாம் மௌரியா ஆகிய இருவர் பலத்த காயமடைந்தனர்.

தலையிலும் இடது காலிலும் காயம் அடைந்த அவர்கள் உடனடியாக போவாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து வந்த போவாய் போலீசார், விபத்தை ஏற்படுத்திய முதியவர் உதய் சங்வியை உடனடியாகத் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர். அவர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினாரா என்பதைக் கண்டறிய மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அந்தப் பரிசோதனையின் முடிவில் அவர் மது அருந்தவில்லை என்பது உறுதியானது. வயோதிகம் மற்றும் கவனக்குறைவு காரணமாகவே இந்த விபத்து நேரிட்டதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். போக்குவரத்து விதிகளை மீறியதற்காகவும், கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காகவும் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நெரிசலான சாலையில் அதிவேகமாக வந்த கார் பல வாகனங்களை உருக்குலைத்த இந்தக் கோர விபத்து அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.