வாழ்க்கைப் போராட்டத்தில் வறுமையும் சவால்களும் ஒருவரை முடக்கிவிட முடியாது என்பதற்குச் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறார் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த தாதாசாகேப் பகத். பீட் மாவட்டத்தின் வறட்சியான கிராமத்தில் பிறந்த இவர், குடும்பச் சூழலால் 10-ஆம் வகுப்பு வரை மட்டுமே பயின்றார்.
பின்னர் ஐடிஐ முடித்துவிட்டு புனேவுக்கு வேலை தேடி வந்த பகத், மாதம் 4,000 ரூபாய் சம்பளத்தில் தனது பணியைத் தொடங்கினார். அதன் பிறகு இன்போசிஸ் நிறுவனத்தில் மாதம் 9,000 ரூபாய் ஊதியத்தில் அலுவலக உதவியாளராகச் சேர்ந்தார்.
அங்கு ஊழியர்கள் கணினியில் வேலை செய்வதைப் பார்த்த அவருக்கு, உடல் உழைப்பை விட அறிவு சார்ந்த உழைப்பே வாழ்க்கையை உயர்த்தும் என்ற ஞானம் பிறந்தது.
சக ஊழியர்களின் ஆலோசனையின் பேரில், கிராஃபிக் டிசைனிங் மற்றும் அனிமேஷன் துறையில் ஆர்வம் காட்டிய அவர், இரவு நேரங்களில் விடாமுயற்சியுடன் அதனைக் கற்றுத் தேர்ந்தார்.
தொழில்முறை வடிவமைப்பாளராக மாறிய பகத், ‘டிசைன் டெம்ப்ளேட்’ என்ற தளத்தைத் தொடங்கி, கேன்வா போன்ற உலகளாவிய நிறுவனங்களுக்குப் போட்டியாக வளர்த்தெடுத்தார்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் அலுவலகத்தை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டபோதும், மனம் தளராமல் தனது கிராமத்திற்குத் திரும்பிய அவர், ஒரு மாட்டுத் தொழுவத்திற்கு அருகிலேயே இணைய வசதியுடன் அலுவலகத்தை அமைத்துத் தொழிலைத் தொடர்ந்தார்.
இவரது இந்தத் துணிச்சலான முயற்சியைப் பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடி, ‘மேக் இன் இந்தியா’ திட்டத்திற்கு இவர் ஒரு சிறந்த முன்னுதாரணம் எனப் புகழ்ந்துள்ளார்.
அண்மையில் ‘ஷார்க் டேங்க் இந்தியா’ நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், போட் நிறுவனத் தலைவர் அமன் குப்தாவிடம் இருந்து 1 கோடி ரூபாய் முதலீட்டைப் பெற்றுள்ளார்.
தற்போது ரூ.10 கோடி மதிப்புள்ள நிறுவனமாக உயர்ந்துள்ள இவரது தளம், நடப்பு நிதியாண்டில் 3 கோடி ரூபாய் வருவாயை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
