மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள வயலில் களை எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, தேனீக்கள் தாக்கியதில் மஹிபால் என்ற 55 வயது விவசாயத் தொழிலாளி உயிரிழந்தார். அவருடன் வேலை செய்த மனைவி ஷாலு படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

தம்பதியினர் இருவரும் ஒப்பந்த அடிப்படையில் எடுத்திருந்த பண்ணையில் காலை வேளையில் களை எடுக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அருகில் இருந்த மரத்தில் இருந்த தேனீக்கூட்டிலிருந்து திடீரெனத் திரளான தேனீக்கள் வெளியேறி அவர்கள் இருவரையும் கொடூரமாகத் தாக்கின.

 

தேனீக்களிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள அருகிலிருந்த கால்வாய் நீரில் தலையை மூழ்கடித்துத் தப்பிக்க முயன்றனர். இருப்பினும், தேனீக்களின் தாக்குதல் அதிகமாக இருந்ததால் மஹிபால் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.

 

ஷாலுவின் அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த பக்கத்து நிலத்துக்காரர், அவரது குடும்பத்தினருக்குத் தகவல் அளித்தார். உடனடியாக வந்த பிள்ளைகள், மயக்க நிலையில் இருந்த தந்தையை மீட்டு சிகிச்சைக்காகக் கட்சிரோலியில் உள்ள மாவட்ட பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

 

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும் மஹிபால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த ஷாலு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.