சாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராகச் சட்டம் இயற்றப்படும் என்று தவெக அரசின் சமூக நீதித்துறை அமைச்சர் தோழர் வன்னி அரசு அறிவித்துள்ளதை நான் முழு மனதுடன் வரவேற்கிறேன். கண்ணகி-முருகேசன் தொடங்கி தாயூர் பிரவீன் வரை ஒவ்வொரு ஆணவப் படுகொலையின் போதும் பாதிக்கப்படுபவர்களுக்காக நாம் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தோம்.

படுகொலைகள் நிகழும் போதெல்லாம் தனிச்சட்டம் கோரி சங்கர் நினைவேந்தல் நிகழ்வுகள், மாநாடுகள் மற்றும் போராட்டங்களை முன்னெடுத்த நிலையில், இந்த அறிவிப்பு எனக்கு மிகுந்த ஆறுதலையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது. இதற்கு ஒப்புதல் அளித்த தமிழக முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்களுக்கும், தவெக அரசுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுக ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட ஆணையத்தின் பரிந்துரைகளைப் பெற்று, அதன் அடிப்படையில் மிக விரைவில் தனிச்சட்டம் இயற்றப்படும் என்று அமைச்சர் வன்னி அரசு அறிவித்துள்ளது பாராட்டுக்குரியது. முந்தைய அரசால் உருவாக்கப்பட்ட ஆணையத்தின் பணியைத் தொடர்வதுடன், அதனைச் சட்டமாக்கும் முடிவை எடுத்த தவெக அரசின் நல்லெண்ணத்தை நாம் வரவேற்க வேண்டும்.

சாதி என்பது நமது சமூகத்தின் ஒரு மாபெரும் சாபமாகும்; சாதி மறுப்பு மற்றும் மத நல்லிக்கணைப்புத் திருமணங்களை அதிகரிப்பதன் மூலமே உண்மையான தேசிய ஒருமைப்பாட்டை அடைய முடியும் என்ற லட்சியத்தை நோக்கி இந்த அரசு ஒரு மிகச்சிறந்த அடியை எடுத்து வைத்துள்ளது.

ஆணவப் படுகொலைகள் மட்டுமல்லாமல் அனைத்து வகையான ஆணவக் குற்றங்களையும் முற்றிலுமாகத் தடுத்து நிறுத்த இந்தச் சட்டம் உறுதுணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

“>

 

இந்த அறிவிப்பை வெளியிட்டதுடன் இதற்கான முழுமையான நடவடிக்கைகளை உறுதியுடன் செயல்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்களையும், தவெக அரசையும் நான் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். களத்தில் நின்று இதற்காகத் தொடர்ந்து போராடிய சமூக நீதித்துறை அமைச்சர் தோழர் வன்னி அரசு அவர்களுக்கும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.