பிகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள், அங்கிருந்த வளர்ப்பு நாயை கட்டுப்படுத்திவிட்டு பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முஃபஸில் காவல் நிலையத்துக்குள்பட்ட பர்வார் கிராமத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. சம்பவத்தன்று இரவு பலத்த மழை பெய்து கொண்டிருந்ததால், அதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட கொள்ளையர்கள் வீட்டுக்குள் புகுந்ததாகக் கூறப்படுகிறது. வீட்டின் பாதுகாப்புக்காக வளர்க்கப்பட்ட நாய் குரைத்து அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவிக்காமல் இருக்க, அதன் வாயில் ஒட்டும் நாடாவை ஒட்டியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தன்று இரவு வீட்டில் ஆலோக் சிங் மற்றும் அவரது மனைவி தனித்தனி அறைகளில் தூங்கிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களது குழந்தைகள் ரக்ஷா பந்தனையையொட்டி உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்த நிலையில், குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களும் வெளியே சென்றிருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதை அறிந்திருந்த கொள்ளையர்கள், நள்ளிரவு 12 மணிக்குப் பிறகு வீட்டுக்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது. பலத்த மழை மற்றும் வீட்டில் இயங்கிக் கொண்டிருந்த குளிரூட்டியின் சத்தத்தைப் பயன்படுத்திக் கொண்டு அவர்கள் செயல்பட்டதாகத் தெரிகிறது. முதலில் வளர்ப்பு நாயை கட்டுப்படுத்திய பின்னர், வீட்டின் அறைகளுக்குள் சென்று கொள்ளையடித்ததாகக் கூறப்படுகிறது.
வீட்டில் இருந்த மூன்று அறைகளின் கதவுகளில் பொருத்தப்பட்டிருந்த பூட்டுகளை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே சென்றுள்ளனர். அங்கிருந்த இரண்டு பீரோக்கள் மற்றும் இரண்டு இரும்புப் பெட்டிகளைத் திறந்து பொருள்களை சிதறடித்துள்ளனர். பின்னர் சுமார் ரூ.3.5 லட்சம் முதல் ரூ.4 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகளுடன், ரூ.40 ஆயிரம் ரொக்கப் பணத்தையும் எடுத்துச் சென்றதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். மறுநாள் காலையில் எழுந்தபோதுதான் வீட்டில் கொள்ளை நடைபெற்றிருப்பது குடும்பத்தினருக்குத் தெரியவந்துள்ளது. வீடு முழுவதும் பொருள்கள் சிதறிக் கிடந்ததைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் ஏராளமான கிராம மக்கள் சம்பவ இடத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கிராமங்களில் இரவு நேரக் காவல் ரோந்துப் பணியை அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தகவல் கிடைத்ததும் முஃபஸில் காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். வீட்டின் உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து, கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். மழைக்காலத்தை பயன்படுத்தி கிராமப்புறங்களில் இதுபோன்ற கொள்ளைச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
