சர்வதேச கிரிக்கெட்டில் 94 ஆண்டுகளாக நீடித்து வந்த சாதனையை ஐல் ஆஃப் மேன் அணியின் வீராங்கனை ஜோன் ஹிக்ஸ் முறியடித்துள்ளார். 51 வயது 173 நாள்களில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் ஒரு ஆட்டத்தில் 5 விக்கெட் வீழ்த்திய அதிக வயதான வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதற்கு முன்பு இந்த சாதனை ஆஸ்திரேலிய வீரர் பெர்ட் அயர்ன்மோங்கரின் பெயரில் இருந்தது. இளம் வீரர்கள் சாதனைகளைப் படைத்து வரும் நிலையில், 51 வயதில் ஜோன் ஹிக்ஸ் படைத்த இந்த சாதனை கிரிக்கெட் உலகில் கவனம் பெற்றுள்ளது.

ஜோன் ஹிக்ஸ் தனது 47-ஆவது வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். தற்போது 51 வயது 173 நாள்களில் கிரீஸ் மகளிர் அணிக்கு எதிரான டி20 ஆட்டத்தில் அபாரமாக பந்துவீசியுள்ளார். வலது கை சுழற்பந்து வீச்சாளரான அவர், 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்த பந்துவீச்சு செயல்பாடாக அமைந்தது. மேலும், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அவர் 5 விக்கெட் வீழ்த்தும் சாதனையைப் படைத்தது இது மூன்றாவது முறையாகும்.

இதற்கு முன்பு ஆஸ்திரேலிய வீரர் பெர்ட் அயர்ன்மோங்கர் 49 வயது 314 நாள்களில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். 1932-ஆம் ஆண்டு அவர் படைத்த அந்த சாதனையே நீண்ட காலமாக நீடித்து வந்தது. தற்போது அதைவிட அதிக வயதில் 5 விக்கெட் வீழ்த்தி ஜோன் ஹிக்ஸ் புதிய சாதனையைப் படைத்துள்ளார். மேலும், 50 வயதைக் கடந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் 5 விக்கெட் வீழ்த்திய முதல் வீராங்கனை என்ற சிறப்பையும் அவர் பெற்றுள்ளார்.

ஜோன் ஹிக்ஸின் சிறப்பான பந்துவீச்சால் ஐல் ஆஃப் மேன் மகளிர் அணி, கிரீஸ் அணியை 15 ஓவர்களில் 52 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தது. பின்னர் இலக்கை 6 ஓவர்களுக்குள்ளாகவே எட்டி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 47 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி, 51 வயதில் உலக சாதனையைப் படைத்திருக்கும் ஜோன் ஹிக்ஸின் பயணம் கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் அவரது சாதனை அமைந்துள்ளது.