உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச் பகுதியில், சாலையோரத்தில் காயமடைந்து மயங்கிய நிலையில் கிடந்த பெண்ணை காவல் ஆய்வாளர் ஒருவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற சம்பவம் கவனம் பெற்றுள்ளது. வெள்ளிக்கிழமை வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கைரிகாட் காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர் பிரதீப் குமார் சிங், தாலியா கிராமம் அருகே அந்தப் பெண் சாலையோரத்தில் கிடப்பதைப் பார்த்துள்ளார். விசாரணையில், அவர் 55 வயதான காயத்ரி தேவி என்பது தெரியவந்தது. அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவர் காயமடைந்திருக்கலாம் என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெண்ணின் நிலையைப் பார்த்த ஆய்வாளர், உடனடியாக அவருக்கு உதவி செய்ய முன்வந்துள்ளார். மயங்கிய நிலையில் இருந்த காயத்ரி தேவியை தனது கைகளில் தூக்கிக்கொண்டு அருகிலிருந்த மருத்துவரிடம் அழைத்துச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது போலீஸ் வாகனம் பின்னால் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், ஆய்வாளர் பெண்ணை கைகளில் தூக்கிச் செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்தக் காட்சியைப் பார்த்த பலரும், அவசர நேரத்தில் பெண்ணுக்கு உதவ முன்வந்த காவல் அதிகாரியின் செயலைப் பாராட்டி வருகின்றனர்.

 

ஆய்வாளர் பிரதீப் குமார் சிங், காயத்ரி தேவியை அருகிலிருந்த மருத்துவர் சிவ்சரண் சிங்கிடம் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். பெண்ணின் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் உடனடியாக மருத்துவ உதவி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே தாம் நடவடிக்கை எடுத்ததாக ஆய்வாளர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, பெண்ணை மோதியதாகக் கூறப்படும் அடையாளம் தெரியாத வாகனம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்து எப்படி ஏற்பட்டது, பெண்ணை மோதிய வாகனம் எது என்பது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் நடைபெற்ற பகுதியில் கிடைக்கும் தகவல்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் அந்த வாகனத்தை அடையாளம் காணும் முயற்சி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, காயமடைந்த பெண்ணை தாமதிக்காமல் மருத்துவ உதவிக்கு அழைத்துச் சென்ற ஆய்வாளரின் செயல் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அவசர நேரத்தில் மனிதநேயத்துடன் செயல்பட்ட காவல் அதிகாரியின் இந்த நடவடிக்கை தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. மேலும் அதே நேரத்தில் பின்னால் வாகனம் வரும்போது வாகனத்தில் வைத்து பெண்ணை அழைத்து செல்லாமல் இவர் எதற்காக பெண்ணை கையில் தூக்கி கொண்டு சென்றார் என்று ஒரு தரப்பினர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.