இன்றைய நவீன கார்ப்பரேட் வேலைச் சூழலில், ஊழியர்களின் மனநலமும் ஆரோக்கியமான பணிச்சூழலுமே நிறுவனத்தின் உற்பத்தித் திறனுக்கு முதன்மையான காரணியாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், அதே அலுவலகச் சூழலில் சக ஊழியர்கள் சிலரின் கட்டுப்பாடற்றப் பழக்கவழக்கங்கள் பிறருக்கு எவ்வளவு பெரிய இடையூறாகவும், சகித்துக்கொள்ள முடியாத தொல்லையாகவும் மாறக்கூடும் என்பதற்குச் சமீபத்தில் இணையத்தில் வைரலாகி வரும் ஒரு பணித்துறப்பு சம்பவம் சான்றாக அமைந்துள்ளது.
அலுவலகத்தில் சக ஊழியர்கள் புகைபிடிப்பதால் ஏற்படும் கடும் சிகரெட் துர்நாற்றத்தைத் தாங்க முடியாமல், பெண் ஊழியர் ஒருவர் தனது வேலையையேத் துறந்துள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
தனது ராஜினாமா கடிதத்தில் மிகவும் வெளிப்படையாகவும் துணிச்சலாகவும் குறிப்பிட்டுள்ள அந்தப் பெண், அலுவலகத்தில் உள்ள சில ஊழியர்கள் அடிக்கடி புகைபிடித்துவிட்டு வருவதால், அவர்களது உடைகளிலிருந்தும் சுவாசித்த காற்றிலிருந்தும் வெளியேறும் சிகரெட் துர்நாற்றம் தனக்குக் கடும் தலைவலியையும் சுவாசக் கோளாறுகளையும் ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து நிறுவனத்தின் உயர் அதிகாரிகளிடம் பலமுறை புகாரளித்தும், அதற்கான சரியான தீர்வுகளோ அல்லது முறையான கட்டுப்பாடுகளோ விதிக்கப்படவில்லை. இதனால் தனது சுயமரியாதையையும், உடல் ஆரோக்கியத்தையும் காப்பாற்றிக்கொள்ள வேறு வழியின்றி வேலையை விட்டு விலகும் முடிவை அவர் எடுத்துள்ளார்.
“நான் என் சூழலுக்கு ஏற்ப என்னை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை; பிறருக்கு இடையூறு விளைவிக்கும் அவர்கள்தான் தங்கள் பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்” என்ற அந்தப் பெண்ணின் தீர்க்கமான நிலைப்பாடு, இணையத்தில் உள்ள ஆயிரக்கணக்கான ஊழியர்களின் ஆதரவைப் பெற்று வருகிறது.
பொது இடங்களிலும், மூடப்பட்ட கார்ப்பரேட் அலுவலக அறைகளிலும் ‘செகண்ட் ஹேண்ட் ஸ்மோக்கிங்’ எனப்படும் மறைமுகப் புகைபிடித்தலின் ஆபத்துகள் குறித்த விழிப்புணர்வை இச்சம்பவம் மீண்டும் ஒருமுறை உரக்கப் பேசியுள்ளது. ஊழியர்களின் அடிப்படை ஆரோக்கிய உரிமைகளுக்கு முன்னுரிமை அளிக்காத நிறுவனங்களுக்கு இச்சம்பவம் ஒரு பாடமாக அமைந்துள்ளது.
