பஞ்சாபைச் சேர்ந்த சமூக ஊடகப் பிரபலமான மஞ்சீத் கவுர், சண்டீகரில் இருந்து கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட சம்பவத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சுமார் இரண்டு மாதங்களாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், ஆகஸ்ட் 26-ஆம் தேதி சண்டீகரில் உள்ள முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் உயிரிழந்தார். முன்னதாக, ஜூலை மாத தொடக்கத்தில் அவர் சண்டீகரின் செக்டர் 34 பகுதிக்கு அழைக்கப்பட்டதாகவும், அங்கிருந்து வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அவரது தாயார் காவல் துறையில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் தற்போது கடத்தல் மற்றும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மஞ்சீத் கவுரின் தாயார் அளித்த புகாரின்படி, அவரது மகளுக்கு அறிமுகமான இருவர் அவரை செக்டர் 34 பகுதிக்கு வரவழைத்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் அவரைத் தாக்கி வாகனத்தில் அழைத்துச் சென்று மொரிண்டா அருகேயுள்ள வனப்பகுதிக்கு கொண்டு சென்றதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு மரத்தில் கட்டி தீ வைக்கப்பட்டதாகவும், பின்னர் மற்றொரு நபர் அங்கு சென்று அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் கூறப்படுகிறது. முதலில் மொரிண்டா மருத்துவமனையிலும், பின்னர் மொஹாலியில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்ற மஞ்சீத் கவுர், அதன் பின்னர் சண்டீகரில் உள்ள முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு மாற்றப்பட்டார்.
இதனிடையே, மஞ்சீத் கவுரின் வாக்குமூலம் பதிவு செய்யப்படாதது தொடர்பாக காவல் துறையின் நடவடிக்கை குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன. மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது அவர் சுயநினைவுடன் இருந்து தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்ய விருப்பம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் வாக்குமூலம் அளிக்கக்கூடிய நிலையில் இருப்பதாக மருத்துவமனை காவல் நிலையப் பிரிவிலிருந்து சம்பந்தப்பட்ட காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அந்த நேரத்தில் விசாரணை அதிகாரி மருத்துவமனைக்கு வரவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பான தகவல்கள் காவல் பதிவிலும் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அவர் உயிரிழக்கும் வரை வழக்கு பதிவு செய்யப்படாதது தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
மஞ்சீத் கவுர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது தாயாரிடம் மீண்டும் புகார் பெறப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது உடல் உடற்கூராய்வுக்குப் பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. சண்டீகர் காவல் துறையினர் தற்போது கடத்தல் நடைபெற்றதாகக் கூறப்படும் இடம், பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வாகனம் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள் மற்றும் சுங்கச்சாவடி பதிவுகளையும் ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், மஞ்சீத் கவுர் ஏற்கெனவே இதுகுறித்து புகார் அளித்தாரா, மருத்துவமனைகளில் இருந்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதா என்பதையும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
