தமிழக அரசியலில் தவெக மற்றும் பாஜாக இடையே கருத்து மோதல்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் அளித்த பேட்டி பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘அடுத்த பிரதமர் விஜய் தான்’ என்று தவெக தொண்டர்கள் தொடர்ந்து கூறி வருவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடிக்கு இணையாக இந்தியாவில் இன்னொரு பிரதமரை சிந்தித்துக் கூட பார்க்க முடியாது என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் தொடர்ந்து பேசிய தமிழிசை, “தமிழ்நாடு மக்கள் கொடுத்திருக்கும் முதலமைச்சர் வாய்ப்பை முதலில் CM விஜய் சரியாகப் பயன்படுத்த வேண்டும்” என காட்டமாக அறிவுறுத்தினார். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பல ஆண்டுகால நீண்ட அரசியல் அனுபவத்தைக் கொண்டவர் என்றும், அத்தகைய மாபெரும் ஆளுமைக்கு இணையாக வேறு யாரையும் வைத்துப் பேசுவதோ அல்லது ஒப்பிட்டுப் பார்ப்பதோ கூட சாத்தியமில்லை என்றும் தமிழிசை செளந்தரராஜன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தமிழிசையின் இந்த அதிரடி பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் காரசாரமான விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
