இரவு நேரத்தில் அவ்வப்போது சிலருக்கு தோலில் அரிப்பு ஏற்படுவது வழக்கம். உடலின் வெப்பநிலை மாற்றம், சருமத்தில் ஏற்படும் வறட்சி மற்றும் ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள் ஆகியவை இரவு நேர அரிப்பிற்கு முதன்மை காரணங்களாக அமைகின்றன. இதை ஆரம்பத்திலேயே கவனிக்கத் தவறினால், இரவு நேரத் தூக்கம் கெட்டுப்போய் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் பாதிக்கப்படக்கூடும்.
சருமத்தில் போதுமான ஈரப்பதம் குறையும் போதுதான் வறட்சியால் அதிக அரிப்பு உண்டாகிறது. குறிப்பாக, இரவில் விழித்திருக்கும் போது உடலின் வெப்பநிலை மாறுபட்டு வறட்சி அதிகமாகும். இதனைத் தடுக்கவும் சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்கவும், தூங்குவதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனையோடு தகுந்த மாய்ஸ்சரைசர் அல்லது ஈரப்பதமூட்டும் கிரீம்களைப் பயன்படுத்தலாம்.
இரவில் தோலழற்சியைக் குறைக்கவும் தொற்றுநோய்களைத் தடுக்கவும் குளியல் பெரிதும் உதவுகிறது. சருமம் நீரேற்றத்துடன் இருக்க ஓட்ஸ் குளியல் அல்லது சிறிதளவு ஆப்பிள் சீடர் வினிகர் கலந்த நீரைக் கொண்டு குளிப்பது நல்லது. இருப்பினும், இவற்றை எச்சரிக்கையுடன் பயன்படுத்திச் சருமத்திற்கு ஏற்றதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
சருமம் தொடர்ந்து வறண்டு போகாமல் தடுக்க, அரிப்பு ஏற்படும் இடங்களில் அவ்வப்போது ஈரமான துணியைக் கொண்டு துடைக்கலாம். இரவில் குறிப்பிட்ட நேர இடைவெளியில் இப்படிச் செய்வதன் மூலம் சருமம் வறட்சியடையாமல் ஈரப்பதத்துடன் இருக்கும். இது அரிப்பிலிருந்து தற்காலிக நிவாரணத்தையும் நிம்மதியான தூக்கத்தையும் தரும்.
அரிப்புப் பிரச்சனை உள்ளவர்கள் ஆடைத் தேர்வில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கம்பளி, பாலிஸ்டர் மற்றும் உடலை இறுக்கமாகப் பிடிக்கும் ஆடைகளை அணிவது சருமத்தில் எரிச்சலை அதிகமாக்கும். எனவே, உடலுக்கு நன்கு காற்றோட்டத்தைத் தரும் சுத்தமான, மெல்லிய பருத்தி ஆடைகளை இரவில் அணிவதே ஆரோக்கியத்திற்குச் சிறந்தது.
