மின்தடை நேரங்களில் வீட்டிற்குத் தடையற்ற மின்சாரத்தை வழங்கும் முக்கியமான சாதனமாக இன்வெர்ட்டர் செயல்படுகிறது. ஆனால், இன்வெர்ட்டர் மற்றும் அதன் பேட்டரியைச் சுற்றிச் சில பொருட்களைக் கவனக்குறைவாக வைப்பது தீ விபத்து, மின்கசிவு மற்றும் பேட்டரி வெடிப்பு போன்ற ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக பேட்டரி சார்ஜ் ஆகும்போது வெப்பம் உருவாகும் என்பதால், அதனைச் சுற்றியுள்ள பகுதியை எப்போதும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

இன்வெர்ட்டர் அருகே காகிதங்கள், செய்தித்தாள்கள், கார்ட்போர்டு பெட்டிகள் மற்றும் பழைய துணிகளை வைக்கக் கூடாது. இவை சாதனம் வெளியேற்றும் வெப்பத்தைத் தடுத்து, இன்வெர்ட்டரை அதிகளவில் சூடாக்குவதுடன், சிறிய மின்கசிவு ஏற்பட்டாலும் எளிதில் தீப்பற்றிக் கொள்ளும் வாய்ப்பை அதிகமாக்குகின்றன.

அதேபோல, பெட்ரோல், டீசல், கெரோசின், பெயிண்ட் தின்னர் போன்ற எரியக்கூடிய திரவங்களையும், டியோடரண்ட், பூச்சிக்கொல்லி ஸ்ப்ரே பாட்டில்களையும் இதன் அருகில் வைக்கவே கூடாது. வெப்பம் அதிகரிக்கும்போது இந்த ஸ்ப்ரே பாட்டில்கள் வெடிக்கும் அபாயம் உள்ளது. மேலும், இடப்பற்றாக்குறை காரணமாக எல்பிஜி சிலிண்டரை இன்வெர்ட்டர் அருகே வைப்பது மிகப்பெரிய விபத்துக்கு வழிவகுக்கும்.

மரப்பெட்டிகள், ஸ்டோரேஜ் பொருட்கள் போன்றவற்றை இன்வெர்ட்டரைச் சுற்றிப் போட்டு அடைத்து வைத்தால் காற்றோட்டம் பாதிக்கப்படும். அதேபோல் தண்ணீர் கேன்கள், ஈரமான துணிகள் போன்றவற்றையும் தள்ளி வைக்க வேண்டும். ஈரப்பதம் எலக்ட்ரானிக் பாகங்களைச் சேதப்படுத்தி மின்கசிவை உண்டாக்கும் என்பதால், பேட்டரி இருக்கும் இடத்தை எப்போதும் உலர்ந்த நிலையில் வைத்திருக்க வேண்டும்.

இன்வெர்ட்டரை எப்போதும் மூடிய கப்போர்டுக்குள் வைக்காமல், தாராளமான காற்றோட்டம் உள்ள திறந்தவெளியில் அமைக்க வேண்டும். வயர்கள் மற்றும் பேட்டரி இணைப்புகளை மாதமொருமுறை பரிசோதிப்பதும், எக்ஸ்டென்ஷன் பாக்ஸைப் பயன்படுத்தாமல் நேரடியாகச் சுவரில் உள்ள சாக்கெட்டில் பிளக் செய்வதும் தீ விபத்து அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கும்.