காலை எழுந்தவுடன் பசியை தீர்ப்பதற்காக எதையாவது சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் நமக்கு இயல்பாகவே தோன்றும். ஆனால், நாம் தேர்ந்தெடுக்கும் எல்லா உணவுகளும் வெறும் வயிற்றுக்கு ஏற்றவை அல்ல. சில தவறான உணவுப் பழக்கங்கள் வயிற்றில் அமிலச் சுரப்பை அதிகரித்து, நாள் முழுவதையும் சோர்வாகவும் அசௌகரியமாகவும் மாற்றிவிடும்.

காலை நேரத்தில் அதிகளவில் டீ அல்லது காஃபி குடிக்கும் பழக்கம் பலருக்கும் உண்டு. ஆனால், வெறும் வயிற்றில் இவற்றை அருந்தும்போது வயிற்றில் அமிலம் அதிகமாகச் சுரந்து, குடல் சுவர்களைப் பாதிக்கும். இதனால் அசிடிட்டி, நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்று உப்பசம் போன்ற அசௌகரியங்கள் உடனடியாக உருவாகும்.

அதேபோல, காலையிலேயே வடை, பஜ்ஜி போன்ற எண்ணெயில் பொரித்த உணவுகளை உண்பதைத் தவிர்க்க வேண்டும். அதிக கொழுப்பு நிறைந்த இந்த உணவுகள் செரிமான அமைப்பை மெதுவாக்கி, குமட்டல் மற்றும் வாயுத்தொல்லையை ஏற்படுத்தும். மேலும், மைதா மற்றும் சர்க்கரை அதிகம் நிறைந்த கேக், பன் போன்ற பேக்கரி பொருட்களும் வெறும் வயிற்றுக்கு ஏற்றவையல்ல.

பழங்கள் உடலுக்கு நல்லது என்றாலும், காலையில் வெறும் வயிற்றில் அதிகளவில் பழங்களைச் சாப்பிடும்போது அதில் உள்ள இயற்கைச் சர்க்கரையும் அமிலத்தன்மையும் சிலருக்கு வயிற்றுப் பிரட்டலை ஏற்படுத்தக்கூடும். மேலும், வெறும் வயிற்றில் சூடான பாலைக் குடிப்பதும் சிலருக்குச் செரிமானத்தை மந்தமாக்கி வாந்தி அல்லது குமட்டல் உணர்வைத் தரும்.

எனவே, காலைப் பொழுதை எப்போதும் மிதமான வெதுவெதுப்பான நீர் அல்லது எளிதில் செரிமானமாகும் உணவுகளுடன் தொடங்குவது நல்லது. நமது செரிமான மண்டலத்தைப் பாதுகாக்கும் வகையில் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைக் கைக்கொள்வதே நாள்முழுவதும் புத்துணர்ச்சியோடு இருக்க உதவும்.