இந்தியச் சமையலில் சப்பாத்தி, பூரி மற்றும் பரோட்டா போன்றவை முக்கிய இடத்தை வகிக்கின்றன. சப்பாத்தி செய்யும் போது மாவைச் சரியாகப் பிசைவது மிக அவசியமாகும். பல வீடுகளில் மாவு பிசையும்போது ஒரு டீஸ்பூன் எண்ணெய் அல்லது நெய் சேர்ப்பார்கள். இதன் பின்னணியில் சமையல் ரகசியம் மட்டுமின்றி, அறிவியலும் ஒளிந்துள்ளது.
மாவு பிசையும்போது எண்ணெய் சேர்க்கும்போது அது மாவுத் துகள்களின் மீது மெல்லிய படலத்தை உருவாக்கி, குளூட்டன் உற்பத்தியைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் மாவு மென்மையாகவும் நெகிழ்வுத்தன்மையுடனும் மாறுகிறது. மேலும், மாவின் உள்ளே இருக்கும் ஈரப்பதம் ஆவியாகாமல் தடுத்து, சப்பாத்தி நீண்ட நேரம் பஞ்சுபோல மென்மையாக இருக்க உதவுகிறது.
எண்ணெய் கலந்த மாவு பலகையிலோ கைகளிலோ ஒட்டாது என்பதால் சப்பாத்தியை எளிதாக உருட்ட முடியும். அத்துடன், சப்பாத்திக்கு நல்ல சுவையையும் நறுமணத்தையும் இது தருகிறது. லஞ்ச் பாக்ஸிற்குச் சப்பாத்தி கொடுத்து அனுப்பும்போது அது வறண்டு போகாமல் ஃப்ரெஷ்ஷாக இருக்க இந்த எளிய முறை பெரிதும் உதவுகிறது.
சப்பாத்தி மேலும் சாஃப்ட்டாக வர சில எளிய வழிகளைப் பின்பற்றலாம். மாவு பிசையக் குளிர்ந்தநீருக்குப் பதிலாக வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்த வேண்டும். பிசைந்த மாவை ஈரத்துணியால் மூடி 20 முதல் 30 நிமிடங்கள் ஊறவைப்பது அவசியம். மாவு மிகவும் கெட்டியாகவோ தளர்வாகவோ இல்லாமல் சரியான பதத்தில் இருக்க வேண்டும்.
அதேபோல, மாவை 5 முதல் 7 நிமிடங்கள் உள்ளங்கையால் அழுத்தி நன்றாகப் பிசைய வேண்டும். சிறிய அளவிலான இந்த எண்ணெய் டிப்ஸும், சரியான ஊறவைக்கும் முறையும் சப்பாத்தியின் மென்மையிலும் சுவையிலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அடுத்த முறை சப்பாத்தி செய்யும்போது இந்த எளிய முறையை முயற்சித்துப் பாருங்கள்.
