மதுரை ஸ்டைல் மட்டன் பொடிமாஸ் என்பது காரசாரமான மற்றும் மிகவும் சுவையான ஒரு அசைவ உணவாகும். மிகக் குறைந்த நேரத்தில் எளிய பொருட்களைக் கொண்டு வீடே மணக்கும் வகையில் இந்த உணவை எளிதாகச் சமைத்து விடலாம்.

முதலில் எலும்பில்லாத ஆட்டுக்கறியை நன்கு கழுவி, மிக்சியில் போட்டு லேசாக ஒரு சுற்று சுற்றி எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் குக்கரில் இந்த மட்டனுடன் மஞ்சள் தூள், உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து 2 முதல் 3 விசில் விட்டு மென்மையாக வேகவைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு வாணலியில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றிச் சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், மிளகு, சோம்பு மற்றும் முந்திரி சேர்த்துப் பொன்னிறமாக வறுக்க வேண்டும். இதனுடன் தட்டிய பூண்டு, துருவிய இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நறுமணம் வரும் வரை வதக்க வேண்டும்.

பின்னர் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்த்து, அது பொன்னிறமாகும் வரை வதக்கி, தேவையான அளவு மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி விட வேண்டும்.

வெங்காயம் வதங்கியதும், ஏற்கனவே வேகவைத்து வைத்துள்ள மட்டனை அதில் சேர்த்து 1 நிமிடம் மூடிவைத்து வேகவிட வேண்டும். இறுதியாகத் துருவிய தேங்காய், கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லித் தழையைத் தூவி லேசாகக் கிளறி இறக்கினால் கமகமக்கும் மதுரை மட்டன் பொடிமாஸ் தயார்.